நம்பிக்கை வாழ்வு
சிலுவை என்பது பாவச் சின்னம்
சிலுவையில் மாண்டால் அவமானமாகும்
சிலுவை சுமப்பது உயர்ந்த தண்டனை
சிலுவையே அன்று கொலைக்கருவி
இது எல்லாம் உண்மை தான்
சிலுவையில் இயேசு மரிக்கும் வரைக்கும்.
சிலுவையில் இயேசு சிந்திய ரத்தம்
பாவக்கறையை பளிச்சென நீக்கும்
கல்வாரி ரத்தத்தில் கழுவப்பட்டால்
கட்டாயம் கிட்டும் பரலோக வாழ்வு
பரமன் பாதம் பற்றிக் கொள்வோம்
பாவம் நீங்கி பரிசுத்தமாவோம்.
இயேசுவோடே இரு கள்வர்
சேர்ந்தே தொங்கினர் கல்வாரியில்
ஒருவன் இயேசுவை கிண்டல் செய்தான்
மற்றவனோ தன் பாவத்தை உணர்ந்து
மன்னியும் என்றான் இயேசுவிடம்
பரலோக வாழ்வு பெற்றான் அவனுமே.
இது சிலுவை தரும் நம்பிக்கை
சிறிதும் மாற்றம் இதிலில்லை
நம்பிக்கையின் அடையாளம்
நாதன் சுமந்த நற்சிலுவை
நாமும் சுமப்போம் சிலுவையினை
நம்பிக்கை வாழ்வு நமக்குண்டு.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.