அறம் செய்யப் பழகு
அறம் என்பதன் பொருள் யாதோ?
தருமம் என்றனர்ஆசிரியப் பெரியோர்;
அன்னதானம் என்றார் வள்ளலார்;
மனத்துக்கண் மாசின்மை என்னும்
தீயன சிந்தியாமையே என்றார் வள்ளுவர்;
கொல்லாமை என்றார் புத்தத்துறவி;
இன்னாசெய்யாமை என்றார்சமணர்;
ஐந்தொழுகையோடு ஈதல் என்றார் முகமதியர்:
சிலுவை போற்றலே என்றார் கிறித்தவர்:
சித்தம் தெளிதலே என்றார் சித்தர்;
இவர்தம் தோளில் ஏறி உயர்ந்தே
தியானித்துச் சிந்தித்துப் பார்த்தேன்!
தன்னை அறிந்து உலகம் போற்றி
தரணி தழைக்கத் தடுமாற்றமின்றி
மானுடம் வெல்லப் பல்லுயிர் வாழ
பகுத்துண்டு வாழப் பழகுதலும்
பக்குவமாக நற்செயல் நாட்டலும்
கல்வி கேள்வியில் கருத்தூன்றிக்
காமம் செப்பாது உண்மை கூறலும்
பண்பட்ட அறநெறியென உணர்ந்தேன்.
உணர்ந்ததோடு உணர்த்துவதோடு
உண்மை நெறியில் உழைத்து
அறம் செயப்ப ழகுகின்றேன்.
நீரும் முயல்வீர்! நெறிமை நாட்டுவீர்!
வாழ்க வளமுடன்!
- குழந்தைசாமித் தூரன், புதுவை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.