கட்டிலுடன் ஞாயிறு!
ஞாயிறு கிழமையாகி வந்தாலும்
எனக்கு இப்போது உற்சாகம் பிறப்பதில்லை.
திங்கள் தகித்துக்கொண்டு சூட்டுடன் சூடாக
வான் திரையைக் கிழித்துக்கொண்டு
இரவு வருமுன்னே விடியலை முடுக்கி
நாளை செய்யப் போகும் வேலையை எண்ணச் சொல்லி
முன்னின்று துன்புறுத்துகிறது.
ஞாயிறு எனக்கான தனிமையைக் கட்டமைத்த
புனிதக் கிழமை.
அன்று
நிறுவனத்தின் மிருக முகமொன்று
பூதமாய் பூமிக்குள்ளிருந்து எழுந்து
கடும் பாலை தேசம் (புன்னகை?)
கடுகடுத்துக் கொண்டிருக்க
என்னை
அங்கே நதியாய் பாயும் கானல் நீரில்
முக்குளித்து முதலாளிக்கான முத்தை
எடுத்துவரச் சொல்லி ஆழத்தில் அழுத்த
நானோ
பொறியின் வாயில் அமர்ந்து
மறைந்து போன தரவுகளில்
தலையை நுழைத்துத் தேடித் தேடி அலைந்து
தரவின் கால்தடம்
மாயமான் போல் மாயம் செய்ய
கைவசம் இருக்கும் குப்பி திறந்து
மதுவருந்த
தரவுகளின் தடத்திலிருந்து தொலைந்து
வேறொரு தேசந்தேடி அலையத் தோன்றும்
ஞாயிறு ஒன்று இல்லாது தோன்றினால்
இல்லை!
ஆ! என் ஞாயிறே
உன்னை இன்று கட்டிலோடு அணைத்துக் கொள்கிறேன்.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.