நீலச்சிட்டே...!நீலச்சிட்டே..!!
நீண்ட வால் அழகுச் சிட்டே!
கச்சிதமாய்க்
கிளையில்
கூடு கட்டி நீ
நடத்தும் குடும்பம்
அழகோ அழகு.
நாங்கள் மட்டும்தான்
பிள்ளைகளைப்
பாசத்தோடு
வளர்ப்போமா என்ன?
சின்னப் பறவை நீ
தேடித்தேடி
இரையை
சின்ன வாயில்
சிந்தாமல் அன்பைக்
குழைத்துத்
தருவதற்கு ஈடில்லை.
உன்னோடு பேச
வந்தது ஏனென
அறிவாயா?
சமீபக் காலமாய்த்
திமிங்கலங்களும்,
சுறாமீன்கள் சிலவும்
கடலை விட்டுக்
கரை சேர்கின்றன
இறந்து.
பசிபிக் கடலோரம்
நீர்வாழ்ப் பறவை
ஒன்று, ஆசைக்
குஞ்சுகளுக்கு
ஊட்டிய
மீன் துண்டுகளே
எமனாய் அவற்றின்
உயிர் பறித்ததாம்.
மக்காத பிளாஸ்டிக்
மலைகளாய்
குவிந்துள்ளனவாம்
நடுக்கடலின் ஆழத்தில்.
மீன்களின் வயிற்றிலும்
பறவைகளின்
வயிற்றிலும்
இருந்தது
பிளாஸ்டிக்
துண்டுகளாம்.
உடற்கூறு
ஆய்வாளர்கள்
சொன்ன தகவலிது.
பக்குவமாய்ப்
பார்த்து இரையை
நீயும்
தெரிந்து எடுத்திடு.
சின்னக் குடும்பம்
சிதறாமல் காத்திடு.
- மீனாட்சிசுந்தரமூர்த்தி, திருப்பாபுலியூர், கடலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.