இத்தரையில் சித்திரை…!
சித்திரையும் வந்திடுமுன் சீதனமாய் அக்கினியும்
சீறிக்கொண்டு கோடையென வாட்டும் வாட்டும்
பத்திரமாய் நோயெதிர்க்கும் பாலமாகி மண்பானைகள்
பாதையோரம் விற்றுநலம் கூட்டும் கூட்டும்
இத்தரையில் கோடைகால இன்னலாக நட்சத்திர
ஈட்டியென அக்கினிதான் பாயும் பாயும்
மொத்தமாக வெப்பத்தினால் மொட்டவிழும் தண்ணீர்பஞ்சம்
மோதுகின்ற போராட்டமாய் காயும் காயும்
கோடையிலே காய்கனியில் கொட்டுகின்ற சாறுகளைக்
கொடுத்துட லாரோக்கியம் காப்போம் காப்போம்
ஆடையிலே மென்பருத்தி ஆசையுடன் வாங்கிகட்டி
அக்கினிசூட் டைவிலக்கி வைப்போம் வைப்போம்
வேரூன்றிவ ளர்ந்தமரம் வெயிலில்நி ழல்தந்தொரு
வெட்டிவேரால் காட்டிடுமே நன்மை நன்மை
ஆரூடம்சொல் கின்றதென ஆடும்மரத்தை வெட்டுகின்ற
அல்லல்களை வேரறுத்தால் தன்மை தன்மை!
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.