ஹைக்கூ கவிதைகள்
அளவெடுத்து வடிவமைத்தான்
தையல்காரன்
உடலுக்குச் சவப்பெட்டி.
*****
தென்றலை வழி நடத்துகிறது
மின்மினி -
மூன்றாம் பிறை.
*****
நினைவு நாளன்றும்
பூ விற்கிறாள் -
மணக்கிறது கணவன் நினைவு.
*****
தேங்கிய நீரில்
ஓவியம் வரைந்து சென்றது
பெய்த மழை.
*****
வாசிக்கும் எண்ணமின்றி
நூல் நிலையத்திற்குள் நுழைகிறது
மின்வெட்டு.
*****
அடுக்கு மாடிக் கட்டிடம்
ஏறுகிறது தீயின் ஜுவாலை
எரிந்து விழுகிறது நிழல்.
*****
உடையாமல் விலகிச் செல்கிறது
கைத்தட்டி குழந்தை இரசிக்கையில்
நீர்க்குமிழி.
*****
உணவு வேளையில்
உடன் அருந்துகிறது
விடுதலைக் கைதியின் நினைவு.
*****
இடி விழுந்தது
உழவன் தற்கொலை எண்ணத்தில்
தூரத்தில் மண் வாசனை.
- முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.