நீள் கனவொன்றில்...!
காக்கைகள் நிறம் மாற
புறாவாகக் காண்கிறேன்
ஆமைகளாய்ச் சிட்டுக்குருவிகள்
ஊரின் குளம் மேநீர்த் தெட்டியாக மாற
வாலிபத்தை உடுத்தித் திரிகிறார்கள்
தலைச் சாயங்களுடன் வயோதிகர்கள்
பகற்பொழுதில் சந்திரனும்
இரவில் சூரியனும் வலம் வருகிறது
வானில்
வேறு கோணங்களில் திசைகளைக்
காட்டுகிறது திசைமானிகள்
நிலைக் கண்ணாடியில்
கருநிழலாய் விழுகிறது பிம்பங்கள்
எதிர் திசையில் உழல்கிறது
கடிகார முட்கள்
பிரபஞ்சத்தில் ஜெனித்தவை எல்லாம்
அதனதன் சுயத்தை இழந்து
வெவ்வேறு அரிதாரங்களுடன்
முற்றிலும் மாறுபட்டிருக்கிறது
எனது நீள் கனவொன்றில்...
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.