திரிபுராந்தகன்
என்ன செய்து என்ன? - இந்தப்
பாழ் வயிற்றில் நீ வந்து பிறந்தாயே
என்ன செய்து என்ன? -அந்த
சடா முனிவன் ஒரு கண்ணைத் திறந்து
சதை யுணர்ச்சித் தீயினை
தன் மூன்றாவது கண்ணால்
எரிக்காமல் விட்டு விட்டானே!
கூடி முயங்கும் வேலையில் -அந்த
கங்கை முடிகொண்டவன் பாகமொருத்தியின்
காதலில் மூழ்கிப் போனானோ?
அந்த நொடியில் இந்தப் 'பாழ்”உணர்ச்சிகளைத்
தூண்டிவிட்டுச் சல்லாபத்தில் மூழ்கிக் கிடந்தானோ?
'பாழ்’ வயிற்றில் உண்டான உடற்ப் பிண்டம்
பொத்தென வெளியே வந்து விழுந்துவிட்டது!
பாழாய் உதிர்த்துப் போகும் உடலில்
தொங்கிக் கொண்டிருப்பது வெறுஞ் சதையோ?
ஆகாய கங்கையோ சுரக்கும்? -இப்போது
ஆற்றிலோ கிணற்றிலோ தூக்கியெறிந்து
விடவேண்டு மென்ற எண்ணத்தை
கூற்றுவன் தூண்டிவிடுகிறானே
இனி என்ன செய்து என்ன?
'திரிபுராந்தகனே” இதோ
உன் தீயின் நாக்குகள் என்னுடலை உண்ணட்டும்!
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.