உரிமை மீட்பின் வரலாறு!
எங்களின் கால்களில் இப்போது
தோலால் தைக்கப்பட்ட செருப்பு
ஆம்,
இது ஓர் உரிமை மீட்பின் வரலாறு
ஓ! ஓ! என்ற அடிமை சாசனக் குரல்களின்
ஓலங்கள் இந்தச் செருப்பில் தைக்கப்பட்ட
நூல்களில் வடுக்களாகக் காட்சியளிக்கிறதை
நீங்கள் உணரவில்லையா?
அங்குசங்கள் கைவிரல்களில் குத்தியபோது
பீறிட்டெழுந்த குருதியின் தடயங்கள்
அவற்றின் முனையில் காட்சியளிக்கின்றதை
நீங்கள் உணரவில்லையா?
எங்கள் செருப்பணிந்த கால் தடங்கள்
தெருக்களில் பதிகிற போது
ஒடுக்கப்பட்டோரின் குரல்
வீரியத்துடன் ஒலிப்பதை
நீங்கள் உணரவில்லையா?
ஓ! ஓ! என்ற அடிமை செய்யப்பட்டோரின்
வரலாற்றுச் சுவடுகள் கேரளத்தின்
வைக்கம் போராட்டத்தின் வெற்றியை
நீங்கள் உணரவில்லையா?
எங்கள் கால்களில் இப்போது
தோலால் தைக்கப்பட்ட செருப்பு
அழகைக் காட்டிலும் எங்களின் உரிமை மீட்பு
நீங்கள் உணரவில்லையா?
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.