ஏல அறிவிப்பு
மாண்புமிகு கட்சியாளர்
அவர்களுக்கு வணக்கம்.
நான் இடது ஆட்காட்டி விரலில்
மையிட்டுக் கொள்ளும் வாக்காளர்களில் ஒருவன்
என்னை ஞாபகம் உண்டா? என்று
கேட்டால் நிச்சயம்
'யாரடா நீ
எனக்கா உன் ஓட்டைப் போட்டாய்”
என்று கேட்பீர்கள்.
தேர்தலின் போது வாக்குறுதிக்கு மாற்றாய்
கத்தை நோட்டுக்களை வாக்குக்கு கொடுத்தீர்;
விசுவாசம் மறக்கவில்லை.
நானும் தங்களுக்குச் சதா தேவைகளின் போது
கையூட்டுக் கொடுத்துச் சாதித்துக் கொள்ளும்
உலோபியாயிற்றே...
எனக்கு வாக்காளர் முகவரி ஒரு கேடா
என்று கேட்பீர்கள்.
நாடாளுமன்ற தேர்தல்
சட்டமன்ற தேர்தல்
அவைகளில் இடமொன்று காலியானால்
இடைத் தேர்தல்
அவற்றுக்கு ஓட்டை விற்றுப் பணம் பண்ணும்
வித்தையினைக் கற்றுக் கொடுத்து விட்டீர்
தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது
என் வாக்களர் தொகுதிக்கு இடைத் தேர்தலை.
என் ஓட்டு இன்னும்
ஏலம் விடப்படவில்லை.
பேரம் பேச ஏல அறிவிப்பு ஒன்று
இதோ.
விலைவாசி ஏறிற்று என்று
ஞாபகம் கொள்வீராக...!
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.