சின்னச் சின்னக் கவிதைகள்
விட்ட பெரு
மூச்சுக் காற்றில்
தடுமாறிப் போகிறது
பிள்ளையார் எறும்பு
*****
சின்னத் தட்டில்
கல்கண்டுப் பால்
சிறுகச் சிறுக
எடுத்துச் செல்லும் எறும்புகள்
*****
பொட்டலமாகக்
கட்டப்பட்டு
உணவோடு வருகின்றன
அஞ்சலிச் செய்திகள்
*****
இருக்கும் வரை
கண்டு கொள்ளாதவர்
இறந்தபின் தருகிறார்
அரைப்பக்க அஞ்சலி
*****
பேத்திக்கு முத்தம்
கொடுப்பவரைத் தப்பாக
நினைக்க வைக்கிறது
பாலியல் வன்முறைச் செய்தி
*****
தன்முனைக் கவிதைகள்
வளர்த்து வரும்
தன்னம்பிக்கை
விதைகள்
*****
தேர்த் திருவிழா
மகிழ்வைத் தருகிறது
அனைத்து
சிறு வியாபாரிகளுக்கு
*****
தவத்தின் பயனா
பிறப்பின் பயனா
வணங்கப்படும் ஒரு கல்
மிதிக்கப்படும் ஒரு கல்
*****
நடப்பதை மறந்தவர்
எடை கூடியதும்
தினமும் பழகுகிறார்
எடைப் பயிற்சி.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.