நாடகம்!
வந்து நின்றான்
பின் முன்னேறி முன்னேறி
என் நேரெதிர்
வந்து நின்றான்
கிழக்கு முகம் திரும்பி
குழறிக் குழறிப் பேசலானான்
நாதழுத்து உடல் வியர்த்து
கண்கள் அரை மயக்கத்தில் இருந்தன.
என் நேரெதிர் திசை நின்ற
அவன் முகம் நோக்கி நடந்தேன்
குழறிப் பேசமுயன்ற வார்த்தை
தடைப்பட்டு தொண்டைக்குள் மடிந்தது.
அவன் எதிர்த்திசை பாத்திரத்துடன்
கையிலிருந்த கத்தியை சட்டென
பின்னிருந்து பாய்ச்சினான்
அப்போது வஞ்சகத்தால்
வீழ்த்தப் பட்டவன் கூறிய வார்த்தை
'நீயுமா புரூட்டஸ்”-ஐ
நொடியில் கண்முன் நிறுத்தியது.
இப்போது பேசத் தொடங்கியனான்
ஆமாம் 'நானே தான்”
கண்கள் மிகத் துல்லியமாகப்
பாவனை செய்தன.
பள்ளி நாடகத்திற்கு ஒத்திகை
அவ்வளவு செதுக்கிய நடிப்பு.
நான் அப்போது கை தட்டினேன்
திடுக்கிட்டு அவர்களிருவரும் பார்த்தனர்
அருகழைத்து மிக அற்புதமான நடிப்பு
என்று பாராட்டுவதைத் தவிர
வேறென்ன செய்ய...?
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.