காவிரியே.... வாராய்...!
நல்ல தமிழ் நாட்டுக்கு
நடந்தே வந்த
குடகுமலைக் குமரியே...
மௌனமாக வந்து
தமிழ்நாட்டைக் கண்டு
மகிழ்ச்சியில் குதித்த மருமகளே...
பெண்ணுக்குச் சீதனமாக
இரு கரைகளைச் சீராக்கி
நடுவிலே வந்த நாயகியே...
கூழாங்கற்களைச்
சலங்கைகளாக்கிக்
கால் கொடுத்த காவிரியே...
கல்லணையைக்
கை வளையல்களாக்கிய
வளைகாப்பு விழாப் பாவையே...
பெண்ணுக்குப் பிறந்தகத்தை விடப்
புகுந்த இடமே பெருமை என்று
பேசிய முன்னோடியே...
சோழநாடு சோறுடைத்து எனும்
சிறப்பு பேரைப் பெற்றுக் கொடுத்த
செந்தமிழ்ப் பொன்னியே...
ஓரவஞ்சனை அணைக்குள்
உன் ஈரம்
பொங்கிக் கொதிக்கட்டும்...
தலைக்காவிரியே தடை தாண்டு
தமிழகம் செழிக்கட்டும்
உன் நடை கண்டு...!
- முத்தமிழருவி மாரிமுத்து.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.