உன்னைக் கைகூப்பித் தொழுகின்றேன்
கைகூப்பித் தொழுகின்றேன் -அடியேன்
உன்னைக் கைகூப்பித் தொழுகின்றேன்
கருணைத் துளிர்க்கு மிருதயம் உள்ள
கருணை வள்ள லடியே தாயே!
உன்னைக் கைகூப்பித் தொழுகின்றேன்
ஒருபொழு தாயினும் எனைநினைந் துயிர்கசியு
மிருதயத் துள்ளே எனைநீ சுமந்தனை!
உன்னைக் கைகூப்பித் தொழுகின்றேன்
ஊன்சதை யோடெனை சுமந்த பொழுதுன்
னூன்தந் தெனைநீ ஈன்றனை தாயே!
உன்னைக் கைகூப்பித் தொழுகின்றேன்
வன்மன மில்லா மனத்தே வலிபொருத்து
தன்மார் பிலேந்தி முலையமு தூட்டினை!
உன்னைக் கைகூப்பித் தொழுகின்றேன்
துடிக்கு மிருதய மறிந்தே துடித்துத்
துடித்து அருகிருந் தெனைநீ காத்தனை!
உன்னைக் கைகூப்பித் தொழுகின்றேன்
ஒருபொரு ளறிய 'உகரஞ்” சுட்டி
அருளொளி யூட்டினை அப்பொரு ளறிந்தேன்!
உன்னைக் கைகூப்பித் தொழுகின்றேன்
இருளினை ஒக்கும் பொருளினை தவிர்த்து
அருள்தரு கின்ற மருந்தினை யளித்தனை!
உன்னைக் கைகூப்பித் தொழுகின்றேன்
உய்யும் வகைதனை யறிய அறிந்தேன்
மெய்யே! அருள்தரு வாயென தொழுதேன்!
உன்னைக் கைகூப்பித் தொழுகின்றேன்
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.