வட்டிக்கடை வியாபாரம்
இன்று காலை முதலே
எங்களூரில் வட்டிக்கடை திறந்திருந்தது.
இன்று ஏனோ மதுக்கடைகளைக் காட்டிலும்
வட்டிக்கடை கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
வரிசைகட்டி ஒழுங்கமைத்து நின்றனர்.
பெற்றோர் எனும் முகங்கொண்டவர்கள்.
ஏனின்று இங்கே கூட்டமென்று ஒருவன் கேட்க
'நாளை பள்ளிக்கூடம் திறப்பு
பெண்டாட்டி நகைஅடகு வைக்க வந்தேன்”எனக் கூறினான்
பஞ்சு மில்லில் கூலிக்கு மாரடிக்கும் மாரியப்பன்.
'எந்த ஸ்கூலில் சேர்க்க” என்று
மற்றொருவன் கேட்க
'சி.பி.எஸ்.இ” என்று பதிலிறுத்தி
'பணம் போத” வில்லையென
முகத்தைத் தொங்கலிலிட்டுக் கொண்டு
என்னை கடந்து போனான் சடையப்பன்.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.