இயற்கையை மீட்போம்!
வழித்துவிட்ட தலைமொட்டை போல நாட்டை
வறட்சியிலே தள்ளிவிடும் செயலை விட்டே
அழித்ததுபோய் காடுகளில் மிச்சம் தன்னை
அடுத்துவரும் தலைமுறைக்காய் மீட்ட ளிப்போம் !
குழிபோட்டு குழிபோட்டுப் பூமிக் குள்ளே
குழாய்விட்டே இருக்கின்ற நீரெ டுத்தே
விழிபிதுங்கிச் சந்ததியர் தாகத் தாலே
விக்கியுயிர் விட்டிடாமல் மிச்சம் வைப்போம் !
அறிவியலின் முன்னேற்றம் என்று சொல்லி
அதிவிரைவு வாகனங்கள் சாலை ஓட்டிப்
பொறிபறக்க நச்சுபுகை பரவ விட்டுப்
பொலிவான சுற்றுபுறம் காற்றை யெல்லாம்
வெறியோடு மாசுசெய்தே எச்சத் தார்கள்
வெவ்வேறு நோய்களிலே துடிது டிக்கத்
தறிகெட்டுப் போகாமல் தூய்மை காத்துத்
தந்திடுவோம் இயற்கையினைச் செம்மை யாக !
மலைகளினை தகர்த்திட்டோம் குளங்கள் ஏரி
மனைகளாக்கி விற்றுவிட்டோம் ஆற ழித்து
விலைபேசி மணலள்ளி மலடு செய்தோம்
விளைநிலத்தில் சாலைபோட்டு வாழ்வி ழந்தோம் !
தலைமுறையாய்க் காத்துவந்த வளத்தை யெல்லாம்
தாரைவார்த்துச் சந்ததியைத் தவிக்க விட்டோம்
வலைதுடிக்கும் மீன்கள்போல் வருங்கா லந்தாம்
வாய்த்திடாமல் இயற்கையினை மீட்போம் வாரீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.