பாதைகள் ஆயிரமாயிரம்
என்னையே எனக்குள்
தேடுகின்றேன்.
என்னைத் தேடுகின்ற
ஆயுதமாய் மனம்.
எவ்விடத்தில் தொலைந்தேன்
புரியவில்லை.
சீரிய நடையில்
சிகரமாய் தவழ்ந்தேன்.
திறமையால் வெல்ல
முடியாதவர்கள்
துரோகத்தால் வென்றார்கள்…
தொலைந்தபிறகு துவண்டேன்
தோல்விகளால்…
எத்தனை தோல்விகள்
கடந்தாலும்…
மனதின் ஆறுதல்
வசனம்
இதுவும் கடந்துபோகும்…
மிகப்பெரிய
சாதனையாளனுக்கு
சோதனைகள் இயல்பானேதே!
என்னையேத்
திரும்பிப் பார்க்கின்றேன்
தோல்விக்கான
காரணங்களையே
ஆராய்கின்றேன்.
இலக்கிற்கான பயணத்தில்
குடி கொண்டது
அலட்சியம்…
ஒவ்வொரு இலக்கும்
இயம்பிய வாசகம்…
தொடர்ந்து செல்…
சோர்ந்து விடாதே
விட்டு விடாதே
விடாமுயற்சியை…
தோல்வி புதியதல்ல…
வெற்றி நிரந்தரமல்ல…
வாழும் வரை போராடு…
ஒவ்வொரு விடியலும்
உனக்கானதே…
எதை எதையோ
இழந்தாய்…
இழக்காததொன்றாய்
தன்னம்பிக்கை…
பறந்து பார்க்கலாம்
ஊர்ந்து செல்லலாம்
நீந்திப் பார்க்கலாம்
புரண்டு பார்க்கலாம்
எப்படிச் சென்றாலும்
இலக்கு ஒன்றே…
விழியின் வழி(லி)யில்
வீழ்ந்துவிடாதே…
இலக்குகளை வெல்வதற்கு
பாதைகள் ஆயிரமாயிரம்…!
- முனைவா் சி. இரகு, திருச்சிராப்பள்ளி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.