உனக்காகக் காத்திருக்கின்றேன்...
எனக்காக வருவாயா?
உனக்காகக் காத்திருக்கின்றேன்...
ஒவ்வொரு நிமிட
காத்திருப்பிலும்
இதயத்தின் துடிப்புகள்…
குதிரை ஓட்டத்தையும்
கடந்து விடுகிறது.
நெருப்பில் விழுந்த
புழுவைப் போலவே
தேகம் மெலிந்து
வெந்து நொந்து
போகின்றேன்…
அலையென மோதும்
மக்கள் வெள்ளத்தில்
தனித்திருக்கின்றேன்
உன் வருகைக்காக…
எனக்காக வருவாயா?
உனக்காகக் காத்திருக்கின்றேன்...
எப்பொழுதும்
வந்துவிடுவாய்…
மூடுபனியில் …
வெளிப்பட்ட
தென்னவன் போல…
மெல்ல மெல்ல
மெலிந்து கொண்டதோ…
உன் பார்வையில்
கடிகாரத்தின் முற்கள்.
விரைந்து வந்துவிடு
வாழ்க்கையே…
உன் வருகையால்
வசந்தமாகட்டும்…
இல்லையெனில்
பாலைவனமாகி விடும்.
எனக்காக வருவாயா?
உனக்காகக் காத்திருக்கின்றேன்...
நெடுநேர காத்திருப்பில்…
சந்திரனின்
அவதாரத்தையும்
மாறிமாறியே
பரிணமிக்கின்றேன்…
வெப்பக்கலனில்
சிக்கிக் கொண்ட
திரவம் போல
குருதி கொதித்தெழுகின்றது…
எனக்காக வருவாயா?
உனக்காகக் காத்திருக்கின்றேன்…
கழுகின் காலில்
சிக்கிக் கொண்ட
பாம்பைப் போல்
பதபதைக்கின்றேன்…
விரைந்து வருவாயா
பேருந்தே
உனக்காகக் காத்திருக்கின்றேன்…
- முனைவா் சி. இரகு, திருச்சிராப்பள்ளி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.