எங்கள் வீட்டுத் திண்ணை
பிறந்தது என்னவோ மருத்துவமனையில்
வளர்ந்தது வாழ்ந்தது எல்லாம்
எங்கள் வீட்டுத் திண்ணையில்தான்...!
நண்பர்களோடு விளையாடியதும்
நண்பர்களோடு சண்டையிட்டதும்
எங்கள் வீட்டுத் திண்ணையில்தான்...!
பாட்டி சொல்லும்
பழங்கதைகளைக் கேட்டதும்
பசி மறந்து அம்மாவின்
மடியில் தூங்கியதும்
எங்கள் வீட்டுத் திண்ணையில்தான்...!
தோழி ஒருத்தி பூப்பெய்தியதும்
எங்கள் வீட்டுத் திண்ணயில்தான்...!
மனது பட படக்க முதன் முதலில்
காதல் சொன்னதும்
எங்கள் வீட்டுத் திண்ணையில்தான்...!
சித்தப்பாவின் வாழ்கை முறிவுப்
பேச்சு நடந்ததும்
எங்கள் வீட்டுத் திண்ணையில்தான்...!
தாத்தா மூச்சைவிட்டதும்
எங்கள் வீட்டுத் திண்ணையில்தான்...!
நல்லதும் கெட்டதுமாக
நாலும் நடந்தது
எங்கள் வீட்டுத் திண்ணையில்தான்...!
காலங்கள் உருண்டோடி
காசு நிறைய பார்த்த பின்பு
வீட்டைப் புதுப்பித்தோம்
திண்ணையைப் பெயர்த்து...!
இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
என் பேரப்பிள்ளைகள்
கதைகளற்ற மனிதர்களாய்...!
- ரா. தீர்க்கதரிசனன், தேனி..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.