நான் முதல்வரானால்...!

ஊழல்தான் முதலிலிங்கு ஒழித்து நிற்பேன்
உயிர்குடிக்கும் மதுவரக்கன் ஓடச் செய்வேன்
ஆழங்கொள் நர்நிலைகள் தவறாய்க் கொண்ட
ஆக்கிரமிப் களுக்கோர் ஆட்டங் காட்டும்
வேலையினை உடனடியாய்த் தொடங்கி வைப்பேன்
வேலையின்றி அலைகின்ற இளைஞர்க் கெல்லாம்
வேலையினைத் தக்கபடி அளிப்பேன் எங்கும்
வியக்குவண்ணம் ஆட்சியினை அமைப்பேன் பாரீர்
இலவசங்கள் எனும்பேச்சை நீக்கி விட்டே
எல்லாரும் எல்லாமும் பெறுவ தற்கே
நலத்திட்டம் பலவற்றைக் கொணர்வேன் நாட்டில்
நலிந்தோர்கள்இல்லையெனும் நிலைகாண் பிப்பேன்
உலகெங்கும் போற்றுவணம் கல்வி உள்ள
உயர்வினையை மாநிலத்தில் கொணர்வேன் எங்கும்
பலமொழிகள் கற்கின்ற பாங்கைத் தந்து
பைந்தமிழின் மேன்மையினை அறியச் செய்வேன்
வாக்கிற்கு விலைபேசும் வஞ்ச கத்தை
வன்மையாக ஒழித்திடுவேன் தேர்தல் கால
வாக்குறுதி நிறைவேற்றும் வண்ணம் ஆளும்
வர்க்கத்தை வடிவாக்கி மக்கள் முன்னே
ஆக்கஞ்செய் ஆட்சியினைப் புரிவேன் ஆளும்
அமைச்சரவை மக்கள்தம் அவையாய்ச் செய்வேன்
நோக்கமெலாம் மக்கள்தம் உயர்வில் நோக்கும்
நோக்கத்தை நோக்காக நாளும் கொள்வேன்.
விவசாயம் செழிப்பதற்கு வழிகள் செய்வேன்
விளைநிலத்தில் வீட்டடிகள் விளையா வண்ணம்
தவமாகச் சட்டங்கள் இயற்றி நாளும்
தவறாமல் பின்பற்றும் கடமை யாக்கி
விவசாயி உழைப்புக்கோர் உயர்வு செய்வேன்
விவசாயம் இயற்கைவழி நடக்கச் செய்வேன்
உவப்பாக முதல்வரெனும் பதவி ஏற்பேன்
உழைத்திடுவேன் மக்களுக்காய் மகிழ்ச்சி கொண்டே.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.