கருணை வள்ளல் காமராசர்!
காமராசர்! காமராசர்! கருணை வள்ளல் காமராசர்!
கர்மவீரர் காமராசர்! கல்விக் கண் திறந்த மகராசர்!
எளியோர்க்கும் ஏற்றந்தந்த ஏற்றமிகு ஏந்தல்!
படிப்பதாலே இளைஞோர் உயர்ந்திடவே
ஊர்தோறும் பாடசாலை பாங்காக நிறுவினார்.
மதிய உணவும் வழங்கி உடல்நலமுங் காத்தார்.
கறுப்புக் காந்தி காமராசர்! கடமை உணர்வு மிக்கவர்.
முதல்வராக விளங்கினார்; முன்னேற்றப் பாதை அமைத்தார்.
அணைகள் பல கட்டியே ஆக்கம் மிகுத்த அண்ணலார்.
தொழிற்சாலை தொடங்கியே தொழில் வளம் மிகுத்தவர்.
இந்திய அரசியலின் இணையிலாத் தகைமையாளர்.
தரித்திரம் தீரவே திட்டங்கள் வகுத்தவர்.
தமிழில் கல்வி புகட்டவே தகுதியுண்டு என்றவர்.
தனக்கென வாழாமல் தரணி தழைக்க விரும்பினார்.
மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் மதித்தவர்.
இரக்கக் குணத்தவர்; இனிய நன்னடையினர்.
காசின் மீது ஆசையின்றிக் கடமையாற்றிச் சென்றவர்.
தூய்மைக்கு இலக்கணம்; தாய்மைக் குணம் கொண்டவர்;
இளைஞர் எழுச்சியுறவே ஆக்கம் தந்த அருளினர்.
படிக்காத மேதை; பகட்டின்றி வாழ்ந்தவர்.
மாணவர் நலனில் மட்டிலா ஆர்வலர்.
மகராசரைப் போற்றியே அவர் பாதை ஏற்போமே!
ஏற்றமிகு வாழ்க்கையை இயல்பாக அமைப்போமே!
- குழந்தைசாமித் தூரன், புதுச்சேரி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.