கண்டறிதல்!
எந்தப் பக்கத்தில் அதைப் பார்த்தேனெனத்
தெரியவில்லை!
அந்தப் பக்கத்திற்கு ஒரு அடையாளக் குறியைக் கூட
வைக்க மறந்துவிட்டேன்!
அவர் ஒரு கவிஞர் என்று கூறிக்கொள்ள அல்லது
அடையாளம் கண்டுகொள்ள
அந்த ஒரே ஒரு வார்த்தைதான் ஆதாரம்!
எப்படி அந்தப் பக்கத்தின் வார்த்தைகளினூடே
அந்த வார்த்தை ஒளிந்து கொண்டது?
இல்லை நான்தான் ஏதோ
கற்பனையில் அப்படியொரு வார்த்தை உள்ளதென
வாசிக்கையில் வரைந்தேனோ?
அப்படியெனில் என்னுள்ளிருக்கும்
அவன் முகம் இப்படியொன்றாக பரிணமிக்குமென
எதை ஆதாரமாக
எந்தக் குணத்தை நான் என்னுள்ளே
கண்டறிவது?
ஆதாரம்!
எங்கே? என்று நான் யாரிடம்
எங்கே சென்று கேட்பது? என்று தவிப்பதற்குப் பதில்
அதனை நான் பார்க்கவில்லை, வாசிக்கவில்லை
என்று வசதியாகக் கூறினால்? ஐயோ?
அப்போதே கிழித்தெறிந்திருந்தால்
குழப்பமாவது ஏற்படாமலிருக்கும்.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.