பிழை பொறுத்தல் விண்ணப்பம்!

(குழந்தை தாயிடம் பிழைசெய்து பின் பொறுத்தல் வேண்டும் விண்ணப்பம்)
எடுப்பு
பிழைபொறுத் திடவேண்டும் யாதுமறி யாது
யான்செய் திடுஞ்சிறு
பிழைதனைப் பொறுத்திட வேண்டும் இச்சிறி
யேன்செய் பிழையை
(பிழைபொறுத்திட)
உடனெடுப்பு
உள்ள முருகி யுருகி வந்தேன்
அள்ளி யனைத்துத் தந்தாய்
வெள்ளைச் சிரிப்புக் காட்டிக் குழிக்கண்ணத்
திலேஒரு முத்த மிட்டாய்
(பிழைபொறுத்திட)
ஏடு தொடங்கி வைத்தாய் அருமறைகள்
பழுதற எனக்கே கற்பித்தாய்
வேடந் தரித்திடும் பொய்மனம் இல்லா
குணமுடை யாய்நீ நின்றாய்!
(பிழைபொறுத்திட)
நின்னைத் தொழுதிட பொழுதொரு கணமும்
எனக்கொரு தடையேது மில்லை
நின்னடிக் கேயடிமைத் தொண்டு செய்திடவே
எனக்கொரு தடையேது மில்லை
(பிழைபொறுத்திட)
இல்லை எனக்கொரு கதிதான் உன்னை
விட்டா லொருகதி யேதெனக்கு!
அல்லை வந்துற்ற போதும் நின்னை
மனத்தே அழைத்தேன் கதியெனவே!
(பிழைபொறுத்திட)
அழைத்த பொழுதொரு கணமும் அனைக்க
அருகே வருவாய் மறுநொடியே
பிழைத்த பொழுதொரு கணமும் வாய்பாடும்
பதமும் நினது பெயரையே!
(பிழைபொறுத்திட)
பதமும் பொருளும் விலகாப் பதமே
தமிழென அருகினில் உனையழைத்தேன்
நிதமும் நின்புகழ் பாடும் எனக்குத்
தருவாய் அன்பெனும் அருளினையே!
(பிழைபொறுத்திட)
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.