பெயரிடல் வரலாறு
இன்னமும் அவர்களது வீட்டில்
பெயரிடல் முறையில்
மாற்றமேதும் ஏற்படவில்லை.
ஒரு பெயர் காரணத்தோடும்
மற்றொன்று யாதொரு காரணமின்றியும்
அறிந்தோ அறியாமலோ
பன்னெடுங்காலமாய் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
பழங்காலத்துத் தொடர்பு நீள்வதாய்
அவர்களது நம்பிக்கை.
அவர்கள் ஆதிகாலத் தொல்லியல் நிபுணர்களாயிருக்க
வேண்டுமென்று தோன்றியது.
அப்பெயரிடுவதற்கு என்ன காரணமெனக்
கேட்டேன்.
வெத்திலைச் சீவலை மென்றபடி
'எங்கப்பாரோட அப்பாரோட -அவங்க
பாட்டனாரோட முப்பாட்டனாரோட -அதுக்கும்
அவங்கப்பாரோட முப்பாட்டனாரோட பூட்டன்
காலத்துக்கும் முன்னோடியிருந்தே
தலமொற தலமொறயா வகைமாறாம
வெச்சிகிட்டிருக்கோம்” என்றாள்
சமூகத்தின் தொகுப்பு
ஒரு காரணம் அல்லது இடுகுறிப் பெயரின்
பின்னொட்டில் வரலாற்றைச் சுமந்து
விளங்கிக் கொண்டிருக்கிறது.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.