இனி எப்போது காண்போம்...?
(கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி)

இனியாங்கள் என்செய்வோம் அந்தோ என்றே
மக்கள் கண்ணீர் சொரிகின்றார்!
இனியாங்கள் யாரிடம் சென்றே முறையிடவோ
யாங்கள் துன்பத்தில் அழுகின்றோம்!
தேரோடும் புகழ்த்திரு வாரூர் மைந்தா
தமிழகம் கலங்குவதைக் கேட்பீரோ!
ஈரோட்டுப் படையின் தொண்டனாய் இருந்து
திராவிட மண்ணைக் காத்தாய்!
திராவிடப் படைத்தள பதிக்கு மூத்த
படைத்தள பதியாய் நின்றாய்
திராவிடப் போருக்குத் தளபதியாய் நின்றே
கல்லக் குடியினை மீட்டாய்!
மொழிப்போர் வீரா! மொழிப்போர் தனிலே
உன் துணிவு வரலாற்றுச் சரித்திரம்!
செழித்த தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டுதனை
குறளோவியம் எந்நாளும் சொல்லும்!
தெற்கிருந்து வடதிசை அரசுதனை தன்னைச்
சுற்றிச் சுழல வைத்தாய்
தெற்கிற்கு வீழாச் சூரியனாய் நின்றே
இருளினை நீக்கியொளி தந்தாய்!
தமிழர் அவர்தம் நலனென எண்ணி
திராவிட ஆட்சி தந்தாய்
தமிழர் இனியாம் இழந்தோம் உம்மை!
வீழ்ந்தோம் அந்தோ துயரில்!
ஆதவன் தன்னொளி ஒருநாளும் குன்றாது
புவிமீதில் பொன்னாளி வீசும்
ஆதவா உன்புகழ் ஒருநாளும் குன்றாது
இப்புவி மீதிலே வீசும்!
இனியாங்கள் ஆற்றுவார் யாரும் இன்றித்
துன்பத்தில் அழுகின்றோம் அந்தோ!
இனியாங்கள் ஆதவன் முகத்தை எப்போது
காண்போம் இருளே ஒழிவாய்!
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.