நகரும் நரகம்...!
ஜவ்வு மிட்டாய்க்காரர்
கட்டிவிட்ட கடிகாரமும்
சீனாக்காரன் மீசையும்
இனித்துதான் தொலைக்கிறது
தீபாவளிக்கு முந்தைய இரவு
கனவின் வண்ணம்
திருவிழாவில் சுற்றிய
இராட்டின அதிர்வு
பலநாள் கெஞ்சலில்
கிடைத்த சேமியா ஐஸ்
நாட்டாமைக் குளத்தில்
நாளெல்லாம் மூழ்கி
வரும் வழியில்
புளியம்பூ தின்றது
உள்ளூர் நூலகத்தில்
பெரிய மனிதர் இடையில்
சிறுவர்மலர் எடுத்துப் புரட்டியது
வாடகை சைக்கிளில்
குரங்கு பெடல் போட்டு
ஊரை வலம் வந்தது
விசித்திரமான எதுவும்
நுழையாத பால்யம்
மொழியின் அறிதலில்
கசப்பை விழுங்க வைத்தது
இன்னும் ஒரு முறை
அந்தப் பறவையின் ஒலி
எப்போது வாய்க்கும்...?
வானத்தில் சாமியாடும்
வெள்ளைமுனியை
வெறித்தபடி
நகரும் நரகம்...!
- முனைவர் யாழ் எஸ். ராகவன், இராயப்பன்பட்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.