மாமழை
என்றைக்கும் இல்லாமல் ஏந்தி வருகின்ற
இன்னல்கள் தந்திடும் இப்புவி - வன்மம்போல்
மாறிமாறி சீறும் மழையின் வரவின்று
ஆறிடாத புண்பகையின் ஆறு
ஆறு குளங்கள் அனைத்தும் பெருகியே
ஊறு விளைவிக்க ஊருக்குள் - மாறுதலாய்
வெள்ளம் வடியாமல் வேதனை தத்தளிப்பு
வள்ளலாய் மாமழை வார்ப்பு
வார்ப்பிரும்பு சில்லாய் வழுக்கி உடைவதுபோல்
ஆர்ப்பரிக்கும் வான்மழை ஆனந்தத் - தேர்வடமாய்
மாறியென்றும் பாரிழுக்கும் மாண்புடன் காலத்தே
ஆறிடாமல் பெய்தல் அழகு
அழகு நிலையென்று ஆடிடும் உள்ளம்
பழகு நெறிமுறை பண்பை - இழந்து
தவிக்கும் வரலாறு தள்ளாட்டம் போட
புவியில் மழையின் புயல்
புயலடித்து ஓய்ந்து புவனம் செழிக்க
வயல்வெளிகள் பூக்கும் வனப்பில் - கயமை
இருந்தயிடம் புல்லாய் இனம்மாறி நன்மை
வருகவென்று மாமழை வாழ்த்து
வாழ்த்தியே பாடிடும் வாக்கினில் சுத்தமும்
தாழ்ந்திடா நல்லறமாய்த் தங்கியே - ஆழ்மனம்
நட்டிடும் வித்தினால் நாட்டில் விருட்சமோங்கி
மட்டிலா தூற்றும் மழை
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.