திறம்... அறம்...
திறத்தினால் தீதின்றிச் சேர்த்தபொருறுமை
நிறத்தினால் வாடுவோர் நிறைக்கும் - குறைவின்றி
உள்ளத்தால் பொய்யா தொழுகிக் கொடுப்போர்தம்
அள்ளக் குறையா அறம்.
திறனறிந்து தேர்ந்து தெளிந்த அறிவின்
முறையறிந்து மூத்தோர் மொழியாய்ப் - புறந்தெரியா
வண்ணமே கல்வியை வாரி வழங்கிடும்
அண்ணலார் செயலே அறம்.
பசியறிந்து வாடும் பலவயிற்றில் அன்னம்
ருசியறிந் தீவதே ஈகை - வசித்திடும்
வாழ்நாளில் துன்பம் மறுபடியும் சேராமல்
ஆழ்ந்துசெயல் ஆற்றல் அறம்.
திறங்கொண்டோர் முன்னேறத் திக்கெங்கும் பாதையிடும்
மறங்கொண்டோர் மாநிலத்தில் மாந்தர் - முறைகாக்கும்
மாட்சிமை கொண்டோர்க்கும் மக்கட் பணியாற்றும்
ஆட்சியர்க்கும் ஆற்றல் அறம்.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.