அறிவின் அடையாளம் அடக்கம்
நூல்களினால் பெறுகின்ற அறிவும்; செய்யும்
நுண்ணாய்வால் வருகின்ற அறிவும்; நாளும்
கால்நடந்து காண்கின்ற காட்சி யாலே
கலக்கின்ற அனுபவங்கள் அறிவும்; பக்கம்
நால்வருடன் பழகுவதால் அவரின் வாயல்
நமக்குவந்து சேர்கின்ற அறிவும்; வானில்
சூல்கொண்ட மேகம்போல் நமக்குள் சேர்ந்து
சூழ்ந்துள்ளோர் பயன்பெறவே பொழிதல் வேண்டும் !
கூர்த்தறிவு அனைத்துள்ளும் நுழைந்து பார்க்கும்
கூறுகின்ற சொற்களுக்குள் பொருளை ஆயும்
பார்த்தவற்றைப் பார்த்தபடி ஏற்றி டாமல்
பகுத்தறிந்தே அன்னம்போல் பிரித்தெ டுக்கும் !
வேர்த்திட்ட நீர்கழிவை நீக்கல் போன்று
வேண்டாத குப்பைகளை மனத்தில் நீக்கும்
ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதிர்க்கா லத்தை
அரண்போல முன்நின்று பாது காக்கும் !
அனைத்தையுமே குவிக்கின்ற ஆற்றல் பெற்றும்
அருஞ்செயல்கள் முடிக்கின்ற திறனைப் பெற்றும்
பனையளவாய் இருப்பதினைப் பணிய வைத்தும்
பரிதியைப்போல் சுடர்கின்றி அறிவின் கீர்த்தி
வனைந்தகுடம் நிறைந்துள்ள நீரைப் போன்றும்
வற்றாத நடுக்கடலின் அமைதி போன்றும்
தனைக்காட்டிக் கொள்ளாமல் அடக்க மாகத்
தனையாளும் நிலையில்தான் சிறந்தி ருக்கும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.