அலைகள் ஓய்வதில்லை
அலைகள்தாம் ஓயாமல் கரையை மோதி
ஆர்பரித்து ஆர்பரித்துச் செல்லல் போன்றும்
வலைவீசி வலைவீசி மீண்டும் மீண்டும்
வாராத மீன்களினைப் பிடிப்போர் போன்றும்
கலையாமல் கவலைகள்தாம் வந்து வந்து
கண்ணீரை வரவழைத்து வீழ்த்தும் போதும்
நிலைகுலைந்து போகாமல் அதையெ திர்த்து
நிற்பவன்தான் சாதனைகள் படைப்பான் இங்கே !
அடுக்கடுக்காய்ப் பிரச்சனைகள் வரும தற்காய்
அஞ்சிமனம் தளர்பவனோ கோழை யாவான்
வடுக்களாகும் விழுப்புண்கள் தாம்வீ ரத்தை
வரையறுக்கும் தடயமாகும் போர்க்க ளத்தில் !
உடுக்களைப்போல் மின்னவேண்டும் என்றால் நெஞ்சில்
உறுதியுடன் தடைகளினைத் தகர்க்க வேண்டும்
எடுக்கின்ற செயல்களினை இறுதி மட்டும்
எஞ்சாமல் முடிப்பவனே வெற்றி காண்பான் !
முன்னேற ஓரடியை வைக்கும் போதே
முடியிட்டுக் கயிற்றாலே இழுப்பர் காலை
பின்நின்று முதுகினிலே குத்து வார்கள்
பிடறியிலே அடித்துமூளை கலக்கு வார்கள் !
பன்முகமாய் இடையூறு செய்து கீழே
படுகுழியில் தள்ளிடவே முயலு வார்கள்
பன்னூறாய் எதிர்ப்புகள்தாம் வந்த போதும்
பதறாமல் முடிப்பவனே வெல்வான் வாழ்வை !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.