மகாத்மா காந்தியடிகள் - 150

சத்திய மேயுரு வாகி நின்றொளி தந்தார்
நித்திய காந்தி யாகி நின்றொளி தந்தார்
வித்தக ஞானம் கொண்டு பேரொளி தந்தார்
புத்தனைப் போன்று புன்னகைப் பேரொளி தந்தார்.
தன்னைத் தானாய்வு செய்து கொண்டு வாழ்ந்தார்
துன்பம் அதைத்தீர்க்கின்ற வழியினை ஆய்ந்தார்
வன்மம் அதைத்தீர்க்கின்ற அகிம்சை தேர்ந்தார்
அன்பின் வழியொன்றே நன்றென வாழ்வில் வாழ்ந்தார்.
எத்தனை சோதனை நேரினும் விடாது நின்றார்
தத்துவம் உண்மை யோக நெறியில் நின்றார்
தித்தமும் கடுஞ்சொல் வன்மம் எதிர்த்து நின்றார்
நித்தமும் அகிம்சை போற்றி என்றே நின்றார்.
நயம்செய் கண்ணில் ஒளிறும் அன்பைத் தந்தார்
துயர்செய் வார்அவர் இடத்தும் அன்பைத் தந்தார்
அயர்வில் லாது உழைத்து விடுதலை தந்தார்.
உயர்வில் லாதவர் வாழ்வில் உயர்வைத் தந்தார்.
சொல்லும் அருஞ்சொல்லி லெல்லாம் அன்பை விழைந்தார்
வெல்லஞ் சொல்லாக சத்திய மதையே விழைந்தார்
சொல்லும் அருஞ்சொல்லி லெல்லாம் அகிம்சை விழைந்தார்
எல்லாரும் இன்புறவே சத்தியம் துனையென விழைந்தார்.
தேசு பொன்மே னியுடல் திகழ்ந்தன பேரொளியே
நேச முடைய அன்பில் திகழ்ந்தன பேரொளியே
வீசு காந்தி முகமதில் திகழ்ந்தன பேரொளியே
ஏசு பிரான்போன் அவர்புகழ் திகழ்ந்தன பேரொளியே
காந்தி யடிகள் போற்றிய அகிம்சை வாழ்க
காந்தி யடிகள் போற்றிய சத்தியம் வாழ்க
காந்தி யடியெனும் மானுட நெறிகள் வாழ்க
காந்தி யடியெனும் மாமனி தத்துவம் வாழ்க
தேசம் போற்றும் நற்பெருங் கருணை வாழ்க
நேசம் போற்றும் நற்பெரும் உள்ளம் வாழ்க
மாசு அற்றுத் தொண்டு செய்வோர் வாழ்க
வீசு காந்தித் தொண்டு புரிவோர் வாழ்க.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.