மழையில் நனைந்த க(வி)தை

பள்ளிவிட்டுத் திரும்பும் போது
பிடித்திருந்த மழைக்கு
புத்தகப்பையைத் தலையில்
வைத்தபடி ஓலைக்குடிசையை
நெருங்கும் போதே...
வாடா எஞ்சாமி எம்புள்ள
எப்புடி நனைஞ்சிருக்கான் பாரு
என்றபடி தன் மாராப்பு
கச்சையில் தலை துவட்டி
காக்கி டவுசரயும் வெள்ளைச் சட்டையையும்
கழற்றச் சொல்லி...
எறவானத்து கொடியில
உதறிப் போட்டுட்டு ஒருமொழம்
காடாத்துணியக் குடுத்து
அன்னாகவுருல சொருகிக்கன்னு
சொல்லி மழையில் நனைந்து
ஊறியிருந்த நோட்டுப் புத்தகங்களை...
சற்றுமுன் அணைத்திருந்த
அடுப்பங்கரையில் ஒவ்வொன்றாய்
பரப்பி உலர வைத்தவாறு
இப்படி உக்காரு ராசான்னு
வறுத்த கல்லக்கொட்டையைக்
கைநிறையத் திணித்துத்
தின்னுராசான்னு சொல்லிக்கிட்டே...
சாணித்தரையில் குத்தவச்சி
உக்காந்து நான் கல்லக்கொட்டை
தின்னும் அழகை ரசித்த
என் கருவாச்சி அப்பத்தா
வந்து போனாள்,
நேற்றைய அலுவலகம் முடித்து
மழையில் நனைந்தவாறே
வீட்டின் முன்பகுதியை
அடைந்து தலைதுவட்ட ஒரு துண்டு
எடும்மான்னு சொன்ன போது,
"என்னஅவசரம் மழை நின்றபிறகு
வரவேண்டியதுதானே? "
நான் சமையலில் இருக்கேன்
வந்து எடுத்துக்கோங்க என்று
உள்ளிருந்து வந்த இல்லாளின்
உச்சக் குரலை உள்வாங்கிய
தருணத்தில்...
- இல. கருப்பண்ணன், சேலம்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.