அச்சம்

அணங்குகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அச்சம் தவிர்த்து நடந்ததிந்த பூமிதான்
அணங்குகள் தலைகவிழ்ந்து - சந்ததிஈனும்
இயந்திரங்களாய் ஆனதும் இதேபூமியில்தான்
மன்னன் அவையிலே கணவன்
மாண்பினைக் காத்தவளொருத்தி,
கணிகையாகப் பிறந்தும் ஒருவனையே
காதலனாக நினைந்த ஒருத்தி,
பொய்மானினை மெய்யென்று நம்பி
பொல்லாத வலையில் வீழ்ந்தவளொருத்தி,
பாண்டவர்க்கு பத்தினியாய் கௌரவர்களின்
பாத்திய நாட்டை பொசுக்கியவளொருத்தி,
பக்தியால் கிடைத்த மாங்கனிகளைப்
பதிக்கு ஈந்தவள் ஒருத்தி,
சூடிய மலர்களையே சூடுவானென்று
சுந்தர மொழிகள்பாடி வாழ்ந்தவளொருத்தி,
சிறைச் சாலைகளை எல்லாம்
சீர்பெற்ற சாலைகளாய் மாற்றியவளொருத்தி,
தன்காதலன் கள்வன் என்றபோது
தானே தண்டித்தவளொருத்தி,
அத்தகைய அணங்குகள் கனன்ற
ஆயிரமாண்டு நெருப்பை அணைத்து,
ஆதிக்கச் சக்திகளின் பொறுப்பை
அடிமைகளாய் சுமந்து திரிகின்றனர்.
மனைவிக்கும் மகளுக்கும் வேறுபாடில்லா
மாறாப் புண்களுள்ள கரங்கள்
பேருந்துகளில் பயணம் செய்யும்
பெண்களைக் குறிவைக்கும் கண்கள்
பணிக்கு வரும் பெண்களைப்
பாய்க்கு அழைக்கும் வாய்கள்
அணங்குகளின் ஆற்றலைக் கண்ணுற்றும்
அடுப்பறைக்குள் தள்ளும் சொற்கள்
வாழ வழியிழந்த சகோதரிகளுக்கு
விழியென ஏமாற்றுப் பேச்சுகள்
தனிமையில் இருக்கும் பாவையரைத்
தாக்கும் ஆயிரந் தலை(ள)கள்
கல்வி கற்கவரும் சிறுமிகளைக்
கலவிக் கழைக்கும் இதயங்கள்
காதலிப்பதாய் கவிதைகள் பாடி
கழுத்தைக் கொய்யும் சிரிப்புகள்
சாலைகளைக் கடக்கும் போதெல்லாம்
சலங்கைகள் காணாமல் போகும்
மஞ்சள் கயிற்றில் தங்கமிருந்தாலும்
மார்வாடிக் கடைகளுக்குப் போகும்
பொட்டுத் தங்கம் கிடைத்தாலும்
பொடியன்களின் கழுத்தும் போகும்
வாகனங்கள் அருகில் வந்தாலே
வார்த்தையின்றி உயிரும் போகும்
திருடர்கள் சுதந்திரமாய் வாழுமிது
தீம் புனல் நாடு,
கயவர்கள் கைவரிசை காட்டும்
கனிம வள நாடு,
பிச்சை எடுப்பவர்களையும் பிடுங்கும்
பொழில் சூழ் நாடு,
பயிரை மேயும் பாக்கியர்களுக்கு
பாதுகாப்பைத் தரும் நாடு.
அரசியல் செல்வாக்குப் போர்வையில்
அணுதின மொரு கொலையும்,
நவீனக் கொள்கைகளைக் கொண்டு
நாடறிந்த கொள்ளைகளை வளர்த்தலும்,
எதுகை மோனையோடு தானறிந்த
ஏற்றமிகு பொய்களை பொழிதலும்,
அரசே யுக்திகளைக் கையாளுதலால்
அச்சம் என்றும் சாமான்யர்களுக்கே!
வளரும் அரசுகளை அச்சுறுத்தும்
வளர்ந்த பெரும் பூதங்கள்
சிறிய நாடுகளின் பொருளாதாரச்
சிறகுகளை முறிக்கும் பெரியநாடுகள்
தொட்டுத் தொடரும் அணுப்பாரம்பரியமாய்
தொடரும் ஏகாதிபத்திய நிழல்
உலகமயத்தில் ஏழை நாடுகளின்
உவகை காணாத சூழல்
மாற்றுப் பொருளாதாரம் கடனால்
மாறாப் பொருளாதாரம் ஆனது
அச்சப்பட்டு நிற்பவை ஒருநாள்
அச்சுறுத்து பவையாக மாறலாம்
மாற்றங்கள் மறப்பதற் கில்லை
மாற்றம் என்றும் மாறாதது
செவிகளில் நிரப்புகிறேன் கேட்டுச்
சேமியுங்கள் மாற்றமே மாறாதது.
- முனைவர் பி. வித்யா, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.