ஏழுநாள் இருபத்து நான்கு மணி!

திங்கட்கிழமை என்றால்
எனக்கு ஞாபகத்திற்கு வருவது ஒன்றுதான்.
வேலைக் கூச்சல்!
சுவரோரத்தில் தொங்கவிட்ட கடிகாரம்
அலைக்கழிப்புக் குறிகளான
பெரிய முள் சின்ன முள்
சீ! அதனைப் பார்ப்பதற்கே அருவருப்பு.
இப்பொழுது என்னவோ காழ்ப்புணர்ச்சியில்லை
அவற்றின் மீது,
திங்களன்று காலை ஏழு - ஏழே கால் - ஏழரை வரை
(நான் படுக்கை நீங்கி எழுகிற நேரம்)
தலை சுழல சுழல விரட்டுவது போலிருந்தது.
செவ்வாய் காலை ஏழே கால் - ஏழரை - ஏழே முக்கால்
(அப்பொழுது தான் படுக்கை நீங்கி எழுந்தேன்)
அப்போது வெளிப்புறக் கடிகாரம்
உள்புறக் கடிகாரத்தோடு ஏது பிணக்கோ?
தெரியவில்லை. ஏழு - ஏழே கால் - ஏழரை என்றே காட்டிற்று.
புதன் காலை ஏழே முக்கால் - தொடங்கியிருந்தது.
தூங்கவில்லை. அதிகாலை முதற் கொண்டு விழித்திருந்தேன்
இப்போதும் அதன் நேரம் மிகச் சரியாக ஏழு - ஏழே கால் - ஏழரை
வியாழன் காலை முதல் இரவு வரை
தலையை பிய்த்துக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்?
ஏழரை! அட சீ! ஏழரையாம் ஏழரை!
வெள்ளி! தூக்கம் கெட்ட நாளுக்கு பிந்திய நாள்
வெளிப்புறக் கடிகாரம் ஓங்கி அடித்தது
ஏழு மணி! குழப்பத்தோடு எட்டிப்பார்க்க பயம்.
சனிக்கிழமை தூக்கம் கெட்ட இரண்டாம் நாள்.
நிம்மதி அற்று ஒலமிடும் நாயைப் போல்
ஏழு மணி ஓங்கி அடித்தது.
தலைகீழாய் உலகம் சுழலுதோ என்றோரு தனி பயம்.
ஞாயிறு காலை முடிவுசெய்தேன்
ஏழு தொடங்கி ஏழேகால் - ஏழரை ஏழே முக்கால்
வெறித்துப் பார்த்தேன். பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
கடிகாரம் அமைதிநிலையில் இருந்தது.
பெரிய முள் ஏழிலும் சின்ன முள் பத்திலும் நின்றிருந்து.
அதனை உற்று நோக்க நோக்க
என்னுள் நடுக்கம் தொற்றிக் கொண்டது.
துடித்துக் கொண்டிருந்த சின்ன முள் செத்துவிட்டது.
திங்களிலிருந்து ஞாயிறு வரை
ஏழு நாள் இருபத்து நான்கு மணி
உறக்கம் இனி வருமா? என்று தெரியவில்லை.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.