நாற்காலியின் தாலாட்டு
சாய்வு நாற்காலியில் அமர்வது என்பது
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...
நீங்கள் சாய்வு நாற்காலியில் அமர்கிற போது
முகம் ஒளிர தாலாட்டு பாடும்
உங்கள் தாயின் மடிதரும் சுகம் உண்டாகும்.
மெல்ல மெல்ல நாற்காலியின் முகம் மலர்வதை
நான் உற்றுக் கவனித்திருக்கிறேன்.
சீராட்டுப் பாட்டில் மிதக்கும் ஒரு குரலின்
இன்னிசை அல்ல அது
உருகி உருகி பாலூட்டும் தாயின் கருணை.
மழை பெய்த நாளில் நாசிநுகரும்
மண்வாசனையைப் போல்
முலையெடுத்து மழலையின் வாயில் திணித்த போது
மணக்கும் பசும் பாலின் வாசனை
சாய்வு நாற்காலி எனக்கான மடியாக மாறிய பொழுதுகள்
நான் தாயின் அன்புமிக்க கருணையை அடைந்த சுகம்
பசும்பாலைப் போல் இனிக்கிறது.
சாய்வு நாற்காலி
மடியினை தந்தென்னை ஆற்றுப்படுத்த முயற்சிக்கிறது.
அதில் அழகான தாலாட்டு ஒன்று
இசைத்துக் கொண்டிருக்கிறது.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.