முத்தமிழறிஞர் முதுபெரும் கலைஞர்

வித்தக விரல்கள் மீட்டிடும் வீணையாய்
இசைதருஞ் சொற்களை இலக்கிய மாக்கி
விசையுற வைத்தார் வெற்றியை நோக்கி
பண்டிதர் தமிழைப் பாமரன் பேசிடக்
கொண்டிடும் வேட்கையைக் கொண்டனர் கருத்தில்
சீராய் அடுக்கும் சிறந்த மொழியெனப்
பேராய்க் கொண்ட பெருந்தமிழ் உரைகள்
சலனத் திரையில் வசனமாய்ப் பேசும்
கலையினை நேர்த்தியாய்க் காட்டிய கலைஞர்
அன்னைத் தமிழை அரங்கினி லேற்றி
கன்னற் சுவைபெறக் காட்டி நின்றார்
நாவி லசைந்திடும் நற்றமி ழாலே
தாவி வளர்ந்தவர் தமிழ்நாட் டினையே
கோட்டையில் ஏறிக் குவலய மாள
அண்ணா வினையே அரியணை யேற்றி
விண்ணதிர் முழக்குடன் வெற்றிக் கனியதை
கண்ணெதிர் தந்தார் கலங்கு முளத்துடன்
அண்ணா பின்னே அவர்வழி யாளும்
பெற்றினைப் பெற்றார் பெயரது கொண்டார்
சுற்றிச் சுழலுஞ் சூறா வளிபோல்
நற்றமிழ் வளர்த்தார் நாளும் ஏழையர்
பெற்றிட நலனைப் பெரிது முழைத்தார்.
உயர்தனிச் செம்மொழி உயர்தமிழ் அன்னையை
நயம்பட உயர்த்தும் நல்வழி கண்டார்.
அரசிய லரங்கில் அத்தனை தேர்தலில்
நிறைதரும் வெற்றியே நிலந்தனில் வென்றார்
வாழ்நாள் முழுதும் மாநிலங் கொண்ட
தாழ்ந்தோர்க் கான இடவொதுக் கீட்டை
பெற்றிடச் சமர்புரி பெரும்போ ராளியாய்
களத்தில் நின்ற கலைஞர் வீரர்
காலன் கவர்ந்தும் கடற்கரை மண்ணில்
ஓலம் இடுமலை ஓரந் தன்னில்
உளங்கவர் அண்ணா உறங்கிடும் இடத்தில்
விளங்கிட விழைந்து வெற்றியைக் கொண்டார்
கலைஞரைப் போற்றும் காலம்
நிலைவர லாற்றில் நிலைபெறச் செய்யுமே.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.