முள் ஏந்திய மலராவாய்
வன்முறையாய்ப் பறிக்கவரும் கையைக் குத்தும்
வகையினிலே முள்கொண்ட மலரைப் போன்று
மென்னையினைக் கொண்டிருக்கும் பெண்ணே நீயும்
மேன்னையினைக் காத்திடவே முள்ளாய் மாறு
பன்முகத்தைக் கொண்டவர்கள் அன்பாய்ப் பேசிப்
பக்கத்தில் வருவார்கள் பல்லைக் காட்டி
புன்மையினை மறைத்திருக்கும் முகம்கி ழிக்கப்
புலிநகமாய் மாற்றிடுவாய் உன்றன் கையை !
அழகாக உள்ளதென்றே அலர்ந்த பூவை
அலைபாயும் மனத்துடனே அறுக்கச் சென்றால்
வழவழப்பைக் கொண்டரோசா தாழாம் பூவின்
வளைந்தமுட்கள் கைகளினைக் கிழித்தல் போன்று
பழகுதற்கு நரைமுடியின் கிழவ னென்றே
பக்கத்தில் வருவான்தீ எண்ணம் கொண்டே
குழந்தைமனத் துள்ளிருக்கும் குரூரத் தைநீ
குத்திடவே ஈட்டியாக மாற்று கையை !
பொல்லாத கண்களிலே பார்த்தி டாமல்
பொலிவுதனை நுகர்தற்கே கசக்க வந்தால்
சொல்லாமல் தண்டிலுள்ள முள்ளோ குத்திச்
சொல்லாலே அலறுமாறு செய்தல் போல
வில்புருவ முகவழகைப் பார்த்திடாமல்
வீழ்த்தியுடல் அனுபவிக்க முயல்வோர் தம்மை
வில்லேவும் அம்மைப்போல் கூர்மை யாகி
வீழ்த்திடுவாய் காமுகரின் கண்கள் குத்தி !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.