செவித் திறன் வளர்த்துச் சிறப்படைவோமே...!
செல்வத்துட் சிறந்தது செவிச் செல்வம் ! ஆமாம் !
மானுடம் மாண்புற மாட்சிமை வகுத்திட்ட
உலகப் பொதுமறை உரைத்த நன்னெறி !
கேட்டலும் பேசலும் படித்தலும் தெளிவுற எழுதலும்
கருத்தாடல் செம்மைக்கு வாய்ப்பாகும் மொழித் திறன்கள் !
மொழித் திறன் வாய்த்திடில் முதன்மையர் ஆகலாம்!
இவற்றில் திறனுறச் சீரிய பயிற்சி தேவை ! முயல்வீர்!
கருவில் வளரும்போதே கேட்கத் தொடங்கினோம்!
தாலாட்டால் தூண்டப்பட்டோம்! இசையால் இனியரானோம்!
கடுந்தாகத்தினன் நீர் தேடும் வேட்கையொடு
கூர்ந்து செவிமடுத்துக் கூற்றின் குறியறிந்து
கூறுவோன் கருத்தறிந்து, குழப்பம் குறுக்கிடாமல்
அன்னம் போல் சீர்தூக்கிக் கொள்வன கொண்டு
அல்லன தள்ளி நுண்ணறிவானும் அனுபவத்தாலும்
மெய்ப்பொருள் தெளிந்து மேன்மை அடையலாம்!
சிறார் சீருற, மாணாக்கர் சுடர்விட, நாவலராகிட
ஆற்றல் மேம்பட ஆளுமை வளர்ந்திட
உறவு ஊன்றிட ஊரார் மெச்சிட
வையத் தலைமைகொள் வாய்ப்பு நேர்ந்திடச்
செவிச் செல்வமாம் கேட்டல் திறனைச்
செவ்வனே வளர்ப்போம் ! சீரடைவோமே!
- ப. குழந்தைசாமித்தூரன், புதுச்சேரி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.