தேநீர் கதை

இந்தக் குளிருக்கு
படபடக்கும் உதட்டுக்கும் உடலுக்கும்
கொஞ்சம் சூடேற்றிக் கொள்ள
ஒரு குவளைத் தேத்தண்ணீர்
அருந்த வேண்டுமெனத் தோன்றியது.
(தேநீர் அருந்தும் பழக்கமில்லை என்ற போதிலும் கூட)
'இந்தாங்க” என்றபடி ஒரு கைவளையல்
நீட்டித் தந்துவிட்டு
எதிரிலிருக்கும் தேயிலைத் தோட்டத்துக்குள்
நுழைந்து கொண்டது.
வீட்டின் முன் பசுமையைப் போர்த்தியது போல்
பச்சைப் பாசிகளால் படிகள் அலங்கரித்துக்
கண்களைக் கவர்ந்தன. அந்நொடியில் கண்குளிர்ந்து
குளிர்ந்து கனவுகள் சிறகடிக்கா வண்ணம்
உறையிலிருந்தியிருந்தது.
உதட்டைச் சுழித்து 'ச்சூ” உறிஞ்சி அருந்தும் ஓசை
நரம்புகளை நடனமிட வேண்டுமமெனத் தூண்டின
'உலகம் இன்பமயமானது என்றால் அதனை
அனுபவித் துய்த்துணர
மலையரசியின் மடியில் பிறக்க வேண்டும்.
இவர்கள் மலையரசியின் குழந்தைகள்
அவள் அழிவற்றவள் எப்போதும்.
சூல்கொண்ட வலியுடன்
ஒரு மேகத்திடையே ஒரு துளியைப் பிரசவிக்கிறாள்
அதனை அடுத்த கணத்தில் ஈன்றெடுக்கிறாள்
வேரில் விழுகிற நீரைக் கண்டு
உவந்துவந்து இன்பம் களிக்கிறாள்
‘ஓசைகள் யாவும் காற்றில் பிறக்கின்றன
மனதின் ஆசைகள் அதிலே
தனக்கான வரியை நிரப்பிக் கொள்கின்றன
நான் ஏதும் அறியா குழந்தையென
உன் எச்சிலை அருந்திக் களிக்கிறேன்
மழைச் சாரலே என்னோடு விளையாடு’
என்றவன் தன்குரலில் இசைத்துக் கொண்டிருந்தான்
தேயிலைகளுக்கிடையே சுவாசக் காற்றைப்
பிரசவித்தான்
இடையில்
ஒரு அட்டை காலடியை வருடிக் குடித்துக்
கொழுத்துக் கொண்டிருந்தது
நான் சுவைத்தது தேநீரா அல்லது
அவர்களது குருதியா? எனத் தெரியாது
அவ்விடம் விட்டகல
அவர்களிடம் சொல்லிக் கொள்ள ஒரு வார்த்தை கூட
எழவில்லை.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.