தற்புகழ்ச்சி செய்நேர்த்தி

கூட்டமொன்றில் பேசுகிறார்...
அவர் பேசிய வார்த்தையெல்லாம்
பொன்மொழியெனப் புகழப்புகழ
தற்புகழ்ச்சி செய்நேர்த்தி.
எதிரில் குறிப்பெடுத்து
அடிக்கொரு குறிப்பிட்டு அதன்
அருகே கேள்விகளை குறித்துக் கொண்டு
கூட்டதி லமர்ந்திருந்தார்.
மனக்கோ லெடுத்து அடிக்கொருதரம்
கூர்தீட்டித் தீட்டி
செவியில் சினம் நுழைந்திருந்தது.
'தற்புகழ்ச்சி செய்நேர்த்தியார்” என்றே
எதிர் அணி சூட்டியதைக் கேட்டுவிட்டார்.
அவனுக்கு விமர்சகன் என்றொரு பெயர்.
'நேர்த்திசெய்யா உன்படைப்பை யெல்லாம்
எவ்வகையெனப் பட்டியிலிடவென?”
'உனக்கென்னடா தெரியும்
விமர்சகனென்னும் அகால விடமே”
மேலும் செருக்கெனும் விடப்பாம்பு
சுற்றியலைந்தது உள்ளத்துள்.
விமர்சகன்:
பணம் கொடுத்து விபச்சாரி
வீடுதேடி இன்பம் தேடுவது போன்றதுன்
நூல் விளம்பர உத்தி.
அட்டைப்படத்துள் பொம்மையிட்டு
அலாங்கரமிட்டாலும் கோரமுகமொன்று
அழகாகி விடுமோ? அல்லது
அதன் உணர்ச்சிதான்
வாசகனின் நெஞ்சத்தைத் தாக்குமோ?
போடா! என்றபடி...
வரிக்கொருதரம் மொழியைக் கொலைசெய்
வாருக்கில்லை எம்மொழியென
கூட்டத்தை விட்டகன்றான்.
மீண்டும்
தொடர்ந்தபடியிருந்தது
'தற்புகழ்ச்சி செய்நேர்த்தி”
எதிரில் இருந்தவர்கள் வாசகராயெனத் தெரியாது.
கைகள் தட்டும் ஓசைகள் யாருடையதென?!
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.