பைந்தமிழ்ப் புலவன்
பாரதி யென்றொரு பைந்தமிழ்ப் புலவன்
பாரினில் உதித்தனன் தமிழனின் பேறு
கார்மழை மேகமாய்க் கவிமழை பொழிந்தான்
சீர்கொடு துணிவினை மக்களுக் களித்தான்
பேர்கொள விடுதலைப் பெருவுணர் வூட்டி
யார்க்கு மஞ்சாத நெறிதனைக் காட்டி
பாரத நாட்டின் பெருமை யுணர்த்தி
நாமதன் புதல்வர் எனும்நினைப் பூட்டி
தீக்குள் சொற்களின் தெரிசனங் காட்டி
வாக்கில் ஒளியுறும் வண்ணந் தீட்டி
நோக்கில் எரிகதிர் நுண்ணுணர் வாட்டி
தேக்கின் வலிமையில் தேசமுண் டாக்கி
நாட்டு மக்களைத் துயிலெழ வைத்தான்
வேட்டு வெடியென வெடிப்புறக் கவிதைகள்
தேச விடுதலை வேள்வி நடத்த
பூசை ஆகுதிப் பொருளெனச் செய்தான்
நாடு விடுதலை யடையும் முன்னர்
நாடு சுதந்திர மடைந்தது வென்றே
ஆடு மானந்தப் பள்ளினைக் கூவிப்
பாடுந் தீர்க்க தரிசனங் கண்டான்
நள்ளிர வொன்றில் நாடு விடுதலை
துள்ளு மகிழ்வொடு தூய வுணர்வொடு
வென்று மகிழந்தது விடைகண் டோமா
இன்றும் விடிந்ததா என்றுகண் டோமா!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.