வீர சுதந்திரம்
வீர சுதந்திரம் வேண்டி நின்றான் - தேச
விடுதலைக் குழைத்தல் கடமை யென்றான்
சார மிகுந்தமிழ்க் கவிதை செய்தான் - நாம்
தலைமை கொளும்படி வழிகள் தந்தான்
வாரணம் போலெழும் வார்த்தை சொன்னான் - வெடி
மருந்தென எரிகதிர் மொழிகள் கொண்டான்
காரண காரியம் நாட்டுணர் வென்றான் - அதில்
கைவரும் ஆனந்த விடுதலை கண்டான்
பாரதி யென்றொரு பைந்தமிழ்ப் புலவோன் - தந்த
பாரத மணித்திரு நாட்டினுக் குரியோன்
சீரது பெற்றிட வேண்டுமென் றாலோ - நம்
தேசியக் கவியெனச் சாற்றிட வேண்டும்
ஆரண மாய்த்தமிழ் அன்னை அணிந்திட - அவன்
அழகுமுண் டாசினைச் சூட்டிட வேண்டும்
வேரடி மண்ணென அவன்கவி மொழியின் - நல்
வீரத்தைச் சிறார்க்கு மூட்டிட வேண்டும்
தேரது வலம்வரும் எழிலது போலே - நம்
செந்தமிழ் நாட்டுச் சின்ன மென்றே
ஊரது வுலகிற்குக் காட்டிட வேண்டும் - அந்த
உத்தமன் புகழ்நிலை நாட்டிட வேண்டும்
வீர சுதந்திரம் நாமடைந் திடவே - ஒரு
வித்தென விழுந்தான் நாமெழுந் தோமே
பாரதி மானுடன் பிறந்தபொன் னாட்டினில் - நமைப்
படைத்திட்ட இறைவனை தினந்தொழு வோமே!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.