புனைவுகள்... ஆனாலும்...

அவரை, என் எதிரில் இருப்பவரை
நெருங்கிச் சென்று
என்னை அடையாளம் செய்து கொள்கிறேன்
என்னால் புனையப்பட்ட பெயரை
என்னால் புனையப்பட்ட ஊர்ப்பெயரை
என்னால் புனையப்பட்ட முகவரியை
என்னால் புனையப்பட்ட இலக்கியத்தை
என்னால் புனையப்பட்ட எழுத்துக்களை
புனையப்பட்டவை
அதில் உள்ள மீன்கள்
குளத்தில், ஆற்றில், கடலில் நீந்துவன
என்ற போதிலும்,
அவை புனையப்பட்டதிலிருந்து
இந்தக் காகிதத்தில்
எப்போதும் நீந்திக் கொண்டிருப்பவை
அதில் புனையப்பட்ட நாய்,
அதனுடைய புனைப் பெயர்
நீங்கள் நினைத்தது போல்
என்ற போதிலும்
அவை
தன் பெட்டையோடு
மனிதத் தெருவில்
இனச்சேர்க்கையில் ஈடுபடவே செய்யும்.
புனையப்பட்ட அந்தப் பெட்டையோடு அதே தெருவில்.
அதில் நடமாடும் பெண்ணும் ஆணும்
புனைப் பெயர்களோடுதான் உரையாடுகிறார்கள்
அதில் காணும் உறவும் மெய்யாகிவிடும் திறனுடையவை
அதில் அவர்கள் தங்களுக்கென குழந்தயை ஈன்றெடுக்கின்றனர்.
ஆனாலும் வியப்பென்ன
அந்தக் காகிதம் அதன் அழுகையில்
ஈரமாகும் மனநிலை ஏற்படுகிறது.
அதே மீன்கள், நாய்கள், மனிதர்கள், காட்சிகள்
இவையெல்லாம் புனைவுகள்
ஆனாலும்
ஓவியனின் காகிதத்தில் எப்போதும் அழியாதவைகள்.
நீந்திக்கொண்டும், இச்சித்தும், புணர்ந்தும், நடமாடியும்
அதன்மீது கவிந்த மேகத்தில் தன்னுடைய காட்சிகளை
தெற்றென பிரதிபலிக்கின்றன அவைகள்.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.