ஆசிரியர்
பெற்றோரின் கைவிரல் பிடித்து
நடக்கத் தொடங்கிய நாங்கள்
அகன்று விரிந்த கண்களால்
உலகை அள்ளியது உங்களால்
வாழ்வின் கால்பகுதி நாட்கள்
உங்களோடு எங்கள் வாசம்
வளமையின் முழுபகுதி தன்னோடு
ஊற்றி வைத்த நேசம்
ஆணிவேர் தொடங்கி அரசியல்வரை
ஆவலாய் கற்றுக் கொண்டோம்
ஆதிக்கக் கரைசல் அந்திவரை
எங்கள் மீதுபூசிக் கொண்டோம்
உங்களில் எங்களை முழுவதுமாய்
உழுது பண்பட்ட நிலமானோம்
உலகாளும் உரிமையை உங்களால்
உத்தரவாய்ப் பெற்று நின்றோம்
சிந்தைதனை சீக்கிரமாய்த் தந்தருளி
சிறந்ததொரு கண்டுபிடிப்பைக் கண்டோம்
சீனச்சுவரில் நெடிய உம்
ஓவியங்கள் தீட்டுமாறு செய்தோம்
உங்கள் விழிகளால் உலகளந்து
உவகை பெற நினைக்கின்றோம்
உன்னத படைப்பு ஒன்றுண்டாயின்
உங்களை விடப் பெரிதாகாது
திறமைகளை வளர்க்க திக்கற்றவர்களாய்
தேடித் தவித்து நின்றோம்
தீர்மானமாய் மலர்ந்த முகத்துடன்
தீர்த்து வைத்தாய் கேள்விகளை
உலகைக் கற்றுக் கொண்டது
உங்கள் இனிய மொழிகளால்
உலகமே எங்களைக் காணும்
உங்கள் அழகிய விழிகளால்
கருவறை வாசம்விட்டு வந்த
காட்டுப் பூக்கள் நாங்கள்
கற்றுத் தந்த பள்ளியறை
காலங்கள் தாண்டியும் வகுப்பறையே
எத்தனைமுறை ஏற்றி விட்டாலும்
ஏறிப் போகாத ஏணி
உங்கள் வாழ்வே எங்களுக்கு
வாழ்க்கைப் புயலில் தோணி
என்னென்றுமாய் நான் பிறக்க
நினைக்கிறேன் உங்கள் மாணவனாய்
உங்களைக் கற்று எங்களை
வழிநடத்த உங்களால்தான் இயலும்
- முனைவர் பி. வித்யா, மதுரை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.