கின்னரியின் இனிய குரலாய்...
நீங்களாகிய நான் பேசுவதெல்லாம்
வெற்றோசையாயிரா தென நம்புகிறேன்.
நானாகிய நீங்கள் பேசித்திரிவதெல்லாம்
வெற்றோசையாயிரா தென நம்புங்கள்.
உயர்ந்த வொருமலை முகட்டிலிருந்தோ
பனிப்படர்ந்த பிரதேசத்திலிருந்தோ
கனலும் பாலையின் நீழற் கீழிருந்தோ
மணற்பரப்பில் மோதி மூச்சிரைக்கும்
அலையின் கடல்புறத்திருந்தோ
‘குறிகாட்டி’ நிற்கும் ஒருவன் எழுப்பும்
எந்தவொரு மனவெழுச்சியின் வெளிப்பாடாய்
‘ஓ! ஓசைகளே! ஓ! ஓசைகளே!’
என்று எப்படியாயினும் உச்சரிப்பினும்
அதில் மொழிக்கு முந்திய ஓசை நிறைந்திருக்கிறது.
அவைகள் பிரக்ஞையுடன் இந்த வெளியெங்கும்
ஆதிமுதற் கொண்டு
மௌனத்தின் தேரேறி
குறிப்பாய்ப் பாட்டிசைக்கும்
கின்னரியின் இனிய குரலாய்...
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.