வீழா உன் ஒளிமுகம் எங்கே?

மன்னர் பரம்பரையில் வந்துதித்த மாணிக்கம்
மைசூரில் விதைக்கப்பட்டு தமிழகத்தில் கிளைவிட்ட விதை
தந்தையை இரண்டு வயதில் இழந்து
தனித்து விடப்பட்ட தங்கமகள்
கல்வியில் காவியம் படைக்க எண்ணிய போது
கவிந்த காற்றோ வேறுகரை அனுப்பியது
தடம்புரண்ட வாழ்க்கைத் தருணங்களில்
தாரகைக்கு தவிப்பை நீக்கியது திரையுலகம்
அழகுமுகம் மிளிர அரங்கம் அதிர
ஆர்ப்பரிக்கும் மக்களுக்கு ஆடலரசி ஆக்கியது
ஒவ்வொரு திரைக்காவியமும் மெருகேற்ற
ஒருதலைக்காதலாய் மக்கள் மனம் உன்னோடு
தீர்க்கமான முடிவினால் இரும்புப் பெண்ணாகி
தீட்டப்பட்ட வாளின் கூர்மையாய் இரட்டைஇலை
ஆசான் வழியில் அரசியலில் நுழைந்தாய்
அனுபவங்களைக் கற்று ஆதர்ச நாயகியானாய்
மக்களின் மனதில் மணிமகுடம் இருக்க
மானுடம் அனைத்திற்கும் மாதரசி ஆனாய்
தமிழகத்தின் வேர்தனுக்கு நீர் பாய்ச்சி
தமிழனுக்கு பெருமிதமுள்ள அம்மாவானாய்
தாரணி முழுமைக்கும் போராட்ட
தெரிவைகளுக்கு தனித்த அடையாளமானாய்
சிரித்தமுகம் சிந்தனையில் இடம் பிடிக்க
சிரமங்களைத் தாண்டி சிகரங்கள் தொட்டாய்
முன்னேறும் தமிழர்களுக்கு ஒப்புயர்வற்ற
முன்மாதிரி நீயே ஆகிப் பேனாய்
தாழா வேதனையோடு காத்திருக்கிறோம் தாயே!
வீழா உன் ஒளிமுகம் எங்கே?
- முனைவர் பி. வித்யா, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.