நாள்தோறும் புத்தாண்டே...
புதுவிடியல் ஒவ்வொன்றும்
புத்தாண்டாய்ப் பிறக்கட்டும்
புத்துணர்ச்சியோடுமனக்
கொண்டாட்டம் சிறக்கட்டும்
இறந்ததையும் இழந்ததையும்
எண்ணாமல் இருக்கட்டும்
இன்றிருக்கும் நாளையிங்கு
இன்பமெனப் பெருகட்டும்
அனுபவங்கள் பாடங்கள்
அத்தனையும் களைகட்டும்
அடுத்துவாழ வாழ்க்கையிங்கு
இல்லையென்று உணரட்டும்
இருக்கின்ற கைமுதலாய்
இக்கணத்தை அனுபவிப்போம்
நிகழ்காலம் நிகழ்த்துகின்ற
நிகழ்வுகளை இரசிக்கட்டும்
அடுத்தவர்துன்பம் பகிர்வதனாலே
அற்புதங்கள் நிகழட்டும்
அன்பென்னும் பெருங்கடலில்
மனிதநதிகள் கலக்கட்டும்
எப்போதும் வருவதுதான்
புத்தாண்டு புதிதல்ல
புத்துருவாய் மலர்வதுதான்
நாள்தோறும் புத்தாண்டே...
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.