பூத்திருக்கும்... காத்திருக்கும்...
காதலெனும் வெளிச்சப்பூ
மனக்கொடியில் பூத்திருக்கும்
காதலியின் வருகைக்காய்
காலமெலாம் காத்திருக்கும்
சூரியனின் சுடர்கொண்டு
செங்கமலம் பூத்திருக்கும்
சொந்தமென அன்பதனைச்
சுமந்தமனம் காத்திருக்கும்
பார்த்தவிழி பார்த்திருக்கப்
பாவைமனம் பூத்திருக்கும்
சேரந்தமனக் காதலுடன்
காளைமனம் காத்திருக்கும்
தானாக அரும்பியது
தனித்ததெனப் பூத்திருக்கும்
வானாகப் பரப்பினிலே
வளர்காதல் காத்திருக்கும்
அடர்வனமாய்ப் பசுமையுடன்
அழகாகப் பூத்திருக்கும்
படர்கொடிப்பூ பொன்வண்டின்
பார்வைக்காய்க் காத்திருக்கும்
சேர்வதில்தான் காதலுக்குச்
சிறப்பென்று பூத்திருக்கும்
வான்மதியும் மாற்றவொண்ணாத்
தேன்காதல் தித்திருக்கும்
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.