நெஞ்சங் கனிந்து...!
தாளாத் துயர்வரினும் தன்னம்பிக் கைக்கொண்டு
ஆளாய் உருவெடுக்க ஆற்றிடுவோம் - மாளாத
மாத்திறனாய்ச் செய்முயற்சி மாநிலத்தில் வெற்றிகொளக்
காத்திருப்போம் நெஞ்சங் கனிந்து.
*****
மனதை யடக்கவும் மாபெருஞ் சக்தி
தனதென வாக்குந் தகுதி - தினம்பெறவும்
மூத்தோர் வழிநின்று மூச்சுப் பயிற்சிசெயக்
காத்திருப்போம் நெஞ்சங் கனிந்து.
*****
நல்லாட்சித் தோன்றிடவே நாடு நலம்பெறவே
நல்லோர்கள் வென்றிடவே நாம்செய்வோம் - வல்லதவம்
பூத்தவிழி பூத்திருக்க பொற்காலங் காண்பதற்குக்
காத்திருப்போம் நெஞ்சங் கனிந்து.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.