கொஞ்சம் பொறு கண்ணே
குடும்பத்தைக் காக்கவொரு தலைவன் இல்லை
குடியினிலே மூழ்கியவன் கிடப்பதாலே
நடுக்கடலில் துளைவிழுந்த படகு போல
நசுக்குகின்ற வறுமையிலே அமிழ்ந்து போனாள் !
கொடும்பசியில் குழந்தைகள்தாம் துடிதுடிக்கக்
கொடுமையினைக் காணவெண்ணா தாய்மை நெஞ்சாள்
வடுக்களாக உள்ளங்கை காய்ப்பு காய்க்க
வளைந்துடலில் செய்திட்டாள் கூலிவேலை !
சேலையினை இடுப்பினிலே இறுகக்கட்டிச்
செங்கதிரோன் விழிக்குமுன்னே இருள்தாம் சூழ்ந்த
காலையிலே பலவீட்டில் பாத்திரங்கள்
கழுவிட்டாள்; துணிதுவைத்தே காய வைத்தாள் !
ஆலையிட்ட கரும்பாகப் பகலெல்லாமே
அடுத்தடுத்து வேலைகளைச் செய்தயர்ந்தாள்
மாலைவரை பட்டபாட்டிற்காகக் கொஞ்சம்
மனத்திற்கே ஆறுதலாய்க் கூலி பெற்றாள் !
பெற்றந்தப் பணத்தினிலே அரிசி வாங்கிப்
பெரும்பொழுது சாய்ந்திட்ட அந்திநேரம்
பற்றிட்டப சி வயிற்றில் ஏங்கிருக்கும்
பசுங்குழந்தை பசி தணிக்க உலையில் இட்டாள் !
சற்றேதான் பொறுத்திடுவாய் கண்ணே கஞ்சி
சரியாக வெந்தவுடன் தருவேன் என்றே
சுற்றிபுகை சூழ்ந்திருக்கும் அடுப்பெரிக்கச்
சுள்ளிகளை அசைக்கின்றாள் அன்புத்தாய்தான் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.